headline photo

படம் முடிந்தாலும் அலைகள் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கும் - நீர்ப்பறவை

Tuesday, September 17, 2013

எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று . மீனவர் கிராமம் ,மீன் பிடி மக்கள் அவர்களின் கட்டுபாடுகள் பறந்து விரிந்த கடலின் இயற்கையான காட்சியமைப்புகள் அருமை . கதாபாத்திரம் அனைவரும் நம்மில் ஒருவரை போன்று நடிப்பில் எந்த வித செயற்கை தனைத்தையும் புகுத்தாமல் அருமையாக அனைவரையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் . முழுக்க முழுக்க கடற்கரை சார்ந்தே படமாக்கி உள்ளார் .படம் முடிந்தாலும் அலைகள் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கும் . மொத்தத்தில்
நீர்பறவை ஒரு நல்ல படைப்பு .
-தஞ்சை தேவா

கொஞ்சம் அசந்தா கூட ஆவணம் படம் ரேஞ்சுக்கு போயிடும் என்றாலும் சீனுராமசாமியின் திரைக்கதை யுக்தியின் காரணமாக படம் ரொம்பவே ரசிக்க கூடிய வகையில் மாறியிருக்கிறது. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நாம் ஒன்றிப் போவதால் படத்துடனேயே கடைசி வரை பயணிக்கிறோம்.

விஷ்ணுவுக்கு இந்த படம் சினிமா கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. குடித்துவிட்டு லூட்டி அடிக்கும் இவர் பின்பு குடியை மறந்துவிட்டு திருந்தி நல்லவனாக வாழும் கேரக்டர். இவருக்கு ஜோடியாக வருகிறார் சுனைனா. சட்டையும் பாவாடையுமாக வருகிறார் சுனைனா. வம்சம் படத்திற்கு பிறகு சுனைனாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு அமைந்த படம் என்று சொல்லலாம். குடித்து விட்டு வரும் விஷ்ணுவிடம் சாத்தானே அப்பாலே போ… என்று துரத்துகிற போதும் சரி… விஷ்ணு கட்டிப் பிடித்ததைப் பார்த்துவிட்ட எஸ்தரின் பெரியம்மா அவளை திட்ட, அவன் முன்னால வந்து கட்டிப் பிடிச்சா தள்ளி விடலாம்.. பின்னாலல்லா வந்து கட்டிப் பிடிச்சான் என தன் தரப்பு நியாயத்தை சொல்லும் போது, அடடே…போட வைக்கிறார் சுனைனா.

சரண்யா பொன்வண்ணன் நடிப்பைப் பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு கிடைக்கிற வாய்ப்பை செமயாக பின்னி பெடலெடுக்கிற அம்மாவாச்சே அவங்க. விஷ்ணுவின் அப்பாவாக நடித்திருக்கிறார் பூ ராம். தன் மகன் ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி குடிக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு அடித்துத் துவைக்கும் அவர் பின்பு, தன் மகனுக்காக படகு செய்பவரிடம் படகு செய்து தருமாறு கேட்பதும், விஷ்வின் படகில் எழுதியிருக்கும் தன் பெயரைத் தடவிப் பார்ப்பதும்… பூராம்… சான்சே இல்ல… ஒரு நிஜ தகப்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.

படகு செய்து தரும் பாய் கேரக்டரில் வருகிற சமுத்திரக்கனிக்கு சில நிமிட நேர காட்சிகள் என்றாலும் அழுத்தமான அரசியல் பேசும் கேரக்டர்.
பாதிரியாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், சிலுவை கேரக்டரில் வரும் அருள்தாஸ், ஆப்ரகாம் கேரக்டர் யோகி தேவராஜ், எபினேசர் கேரக்டரில் வந்த வடிவுக்கரசி என எல்லோரும் தங்கள் கேரக்டர்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

பறபற, தேவன் மகளே, மீனுக்கு என எல்லா பாடல்களுமே மனதை விட்டு அகல மறுக்கிற பாடல்கள்தான். அதுவும் எல்லா பாடல்களிலுமே காட்சிகளை கோர்வையாக வைத்திருப்பதால் ஒரு பாடலை கூட மிஸ் பண்ணத் தோன்றுவதில்லை. பற பற பாடலில் வரும் வயலின் இசை நம்மை ரொம்பவே கட்டிப் போட்டுவிடுகிறது. படத்தை ஒரு தூக்கு தூக்கியதில் ரகுநந்தனின் பின்னணி இசைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

கடல், உப்பளம் என காட்சி நகரும் ஒவ்வொரு இடத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறது பாலசுப்ரமணியெமின் கேமிரா. கலை வி.செல்வகுமார் கடற்கரையோர செட், கடல் புறத்து வீடு என அத்தனை இடங்களும் செம டக்கராக உருவாக்கியிருக்கிறார். கவிதைத்துவமான படத்தின் நகர்வுக்கு எடிட்டர் காசி விஸ்வநாதனும் ஒரு காரணம். படத்தின் வசனங்களை ஜெயமோகனுடன் இணைந்து எழுதியிருக்கிறார் சீனுராமசாமி. விஷ்ணு, சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சரி, சமுத்திரக்கனி பேசும் இடங்கள், மீனவர் பிரச்சினை பற்றி பேசும் இடங்களில் வசனங்கள் நச்சென சாட்டையைச் சுழற்றி போகின்றன.

தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினையை திரையில் பதிவு செய்ததற்காக சீனு ராமசாமியை பாராட்டியே ஆக வேண்டும். படம் முடிந்த பிறகு, எத்தனையோ அருளப்பசாமிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு என்றுதான் விடிவு காலம் வருமோ… என்ற எண்ணத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியே வருகிறோம்…!

0 comments:

Post a Comment